திருப்பதி,
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி நவனீதம்மாள், திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் உள்ள 3,550 படிக்கட்டுகளைத் தன் குடும்பத்தினருடன் ஏறி, ஏழுமலையானை தரிசிக்க சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் வி.ஐ.பி. தரிசனம் வழங்க ஏற்பாடு செய்தது.
இது தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவில் கூறியிருப்பதாவது:-
116 வயதான நவனீதம்மாள் என்ற மூத்த பெண் பக்தரின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக, இன்று அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திருமலையில் சிறப்பான முறையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஏழுமலையான் தரிசனம் செய்து வைக்கப்பட்டது.
தரிசனம் முடிந்த பின்னர், ரங்கநாயகுல மண்டபத்தில் டிடிடி முதன்மை செயல் அதிகாரி முத்தடா ரவிச்சந்திரா முன்னிலையில் வேத அறிஞர்கள் நவனீதம்மாளுக்கு வேத ஆசி வழங்கியதோடு, பட்டு வஸ்திரம் அணிவித்து சுவாமியின் புனிதப் பிரசாதமும் வழங்கப்பட்ட வேளையில், அந்த அதிகாரி பாட்டியின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். பாட்டியைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அடையாளம் காட்டி ஆதரவளித்த நண்பர்களுக்கும், உடனடியாகச் செயல்பட்டு உரிய ஏற்பாடுகளைச் செய்த டிடிடி விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் தனது நன்றியை உரித்தாக்கி கொள்கிறேன். ஒரு பக்தரின் வாழ்நாள் ஆசையை ஆத்மார்த்தமாக நிறைவேற்றிய இந்தத் தருணம் தங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து நவனீதம்மாளின் பேரன் திக்பதி கூறும்போது, "தங்களது பாட்டியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி, ஒட்டுமொத்த குடும்பமும் பெருமாளைத் தரிசிக்க வழிவகை செய்த தேவஸ்தானத்திற்கும் அதன் தலைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.