தேசிய செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 78.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்து உள்ளது.

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பின் தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இடைத்தேர்தல்

இதனை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் (அசோக் ஆனந்த்), காங்கிரஸ் (விநாயகம்), தி.மு.க. (சேது செல்வம்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சலீம்), நாம் தமிழர் கட்சி (கார்த்திக் குமாரி), இந்திய குடியரசு கட்சி (கலைவாணன்) என 6 பேர் அரசியல் கட்சிகள் சார்பிலும், 5 பேர் சுயேச்சையாகவும் என மொத்தம் 11 பேர் களத்தில் உள்ளனர்.

பிரசாரம் நிறைவு

இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிந்தது. தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க 9 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இதுவரை ரொக்கப்பணம், பரிசுப்பொருட்கள் என ரூ.5 கோடி மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டன.

இன்று ஓட்டுப்பதிவு

பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை, சாய்வு தளம், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வெயிலில் நிற்காமல் இருக்க நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம் 26 ஆயிரத்து 921 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் 12,575 பேர், பெண் 14,341 பேர், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர். இதில் 350 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 3 வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்குவர். புதிதாக சேர்க்கப்பட்ட 584 பேருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

எந்திரங்கள் அனுப்பி வைப்பு

வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 31 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்த தலா 46 மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 48 வி.வி.பாட் எந்திரங்கள், முதல் கட்ட பரிசோதனைக்கு பிறகு லாஸ்பேட்டை மோதிலால் நேரு தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்தில் வாக்குச்சாவடி வாரியாக பிரித்து வைக்கப்பட்டு இருந்தன.

இவை அனைத்தும் நேற்று பிற்பகல் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், கூடுதல் மாவட்ட கலெக்டர் சுதாகர், தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

148 பேருக்கு பயிற்சி

வாக்குப்பதிவு பணிக்காக அரசு ஊழியர்கள் ஏற்கனவே 148 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 23 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 31 வாக்குச்சாவடிகளில் 2 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் போலீசார், துணை ராணுவ படையினர் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

85 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்க அவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டது.

ராணுவம்-போலீசார் பாதுகாப்பு

அதன்படி 104 வாக்காளர்கள் ஏற்கனவே வீட்டிலிருந்தபடி வாக்களித்துள்ளனர். அனைத்து வாக்குசாவடிகளிலும் 500 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், உள்ளூர் போலீசார் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

3 மணி நிலவரம்

இந்த நிலையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், மதியம் வரை ஏறக்குறைய 50 சதவீதம் என்ற அளவிலேயே வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், மதியம் 1 மணி நிலவரப்படி 56.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68.91 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

எனினும், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் பிற்பகல் 3 மணியளவில் 71.47 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது ஒப்பீட்டளவில், இந்த வாக்குகள் சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது. தொடர்ந்து வாக்கு பதிவானது நடந்து வருகிறது.

5 மணி நிலவரம்

இந்த நிலையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 78.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளை விட 5.5 சதவீதம் குறைவு ஆகும். ஓப்பீட்டளவில் இது குறைவு என்றபோதும், தொடர்ந்து 6 மணி வரை வாக்கு பதிவானது நடந்தது.

பலத்த பாதுகாப்பு

இந்த நிலையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்து உள்ளது.

இதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் எந்திரங்கள் ஆகியவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, அதற்குரிய அறைகளில் வைத்து பூட்டி, சீல் வைக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. வருகிற 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT