தேசிய செய்திகள்

ஆயுதங்களால் மட்டுமே போர்கள் நடத்தப்படுவதில்லை, பொருளாதாரத்தைத் தாக்கியும் நடத்தப்படுகின்றன - பிரதமர் மோடி

முந்தைய ஆட்சிக் காலங்களில் ஏழை மக்களுக்கு வங்கிச் சேவைகள் முறையாகக் கிடைக்கவில்லை என பிரதமர் மோடி கூறினார்.

புவனேஸ்வர்,

ஆயுதங்களால் மட்டுமே போர்கள் நடத்தப்படுவதில்லை, ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தாக்கியும் நடத்தப்படுகின்றன. இந்தியா பொருளாதார ரீதியாக வலுவடைந்து வரும் நிலையில், நாட்டின் வங்கித்துறையை இணையவழிக் கொள்ளையர்கள் மற்றும் ‘சைபர் பயங்கரவாதிகளிடம்’ இருந்து பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) ரூ.169 கோடி மதிப்பிலான தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி

“இன்றைய காலகட்டத்தில் போர்கள் ஆயுதங்களைக் கொண்டு மட்டுமே நடத்தப்படுவதில்லை. ஒரு நாட்டைப் பலவீனப்படுத்த வேண்டும் என்றால், அதன் பொருளாதாரத்தைத் தாக்க முடியும். இந்தியா பொருளாதார ரீதியாக வலுவடைந்து வருவதால், நமது வங்கிக் கட்டமைப்பை இணையவழிக் கொள்ளையர்கள் மற்றும் சைபர் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பதும் அதே அளவுக்கு அவசியமாகிறது.

இணையவழி அச்சுறுத்தல்களின் தன்மையும் மாறி வருகிறது. புதிய சவால்களை எதிர்கொள்ள பழைய கட்டமைப்புகள், பயிற்சி முறைகள் மற்றும் கருவிகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது. நவீன உள்கட்டமைப்பும் திறமையான மனிதவளமும் தேவை. அந்த வகையில், ஆர்.பி.ஐ.யின் தரவு மையமும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனமும் முக்கியப் பங்காற்றும்” என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

முந்தைய ஆட்சிக் காலங்களில் ஏழை மக்களுக்கு வங்கிச் சேவைகள் முறையாகக் கிடைக்கவில்லை. 1960 மற்றும் 1970-களில் ஏழைகளின் நலனுக்காக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், 2014-ம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வங்கிச் சேவை கட்டமைப்புக்கு வெளியே தான் இருந்தது.

நடுத்தர மக்களுக்குக்கூட வங்கிக் கடன் பெறுவது கனவாக இருந்தது, ஏழைகள், சிறு விவசாயிகள் மற்றும் பெண்கள் கடன் பெறுவது குறித்து நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலை இருந்தது.காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்கள் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவே கிடைத்தது. இதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகளால் வங்கிகளில் வாராக்கடன்கள் (NPA) அதிகரித்து, இந்திய வங்கித்துறை நெருக்கடியின் விளிம்புக்குச் சென்றவிட்டது.

2014-க்குப் பிறகு வங்கித்துறையில் மாற்றம்

2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு வங்கித்துறையில் மாற்றங்கள் ஏற்பட்டதாக மோடி கூறினார்.

தற்போது இந்திய வங்கித்துறை உலகின் திறமையான வங்கித்துறைகளில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் 24 மணி நேரமும் வங்கிச் சேவைகளைப் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

சிறு தொழில்முனைவோர், பாரம்பரியக் கைவினைக் கலைஞர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் முறையான வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயனடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

அடுத்த 10 ஆண்டுகளில் வங்கிச் சேவைகளின் தரம் மேம்படும்

இந்தியாவின் வளர்ச்சி என்பது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமச்சீரான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதும், கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வசிப்போருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் வங்கிச் சேவைகள் கிடைக்காத மக்களுக்கும் அவற்றைக் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் வங்கிச் சேவைகளை மேலும் திறமையானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT