தேசிய செய்திகள்

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 9 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்பு - மத்திய அரசு

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 9 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 9 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜல் ஜீவன் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குழாய் நீரை வழங்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில், கொரோனா தொற்றுநோய் பரவல் மற்றும் ஊரடங்கு போன்ற இடையூறுகள் இருந்தபோதிலும், இரண்டரை ஆண்டுகளில், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 5.77 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் நீர் வழங்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக இன்று நாடு முழுவதும் உள்ள 9 கோடி கிராமப்புற குடும்பங்கள் சுத்தமான குழாய் நீர் விநியோகத்தின் பலனைப் பெற்றுள்ளன. ஆகஸ்ட் 15, 2019 அன்று அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி, இந்தியாவில் உள்ள 19.27 கோடி குடும்பங்களில் 3.23 கோடி (17%) குடும்பங்கள் மட்டுமே குழாய் நீர் இணைப்புகளைக் கொண்டுள்ளன.

98 மாவட்டங்கள், 1,129 தொகுதிகள், 66,067 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 1,36,135 கிராமங்கள், சுத்தமான குடிநீர் இணைப்பு உள்ள இல்லங்களாக மாறியுள்ளன. கோவா, அரியாணா, தெலங்கானா, அந்தமான் - நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, தாதர் - நகர் ஹவேலி,டாமன் மற்றும் டையூவில் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் குழாய் நீர் விநியோகம் உள்ளது.

பஞ்சாப் (99%), இமாச்சலப் பிரதேசம் (92.4%), குஜராத் (92%) மற்றும் பிஹார் (90%) போன்ற இன்னும் பல மாநிலங்கள் 2022-ம் ஆண்டிற்குள் சுத்தமான குடிநீரை குழாய் மூலம் பெரும் இல்லங்களாக மாறிவிடும் நிலையில் உள்ளன.

ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான மாபெரும் பணியை நிறைவேற்ற, 3.60 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23 -ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் 3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் நீர் வழங்கும் வகையில் இத்திட்டத்திற்கு ரூ 60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய தண்ணீர் விநியோகத் திட்டங்களில் இருந்து ஒரு முன்னுதாரணமாக, ஜல் ஜீவன் திட்டம் தண்ணீர் விநியோகத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள், தண்ணீர் விநியோகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. எவரையும் விட்டுவிடாமல் சுத்தமான குடிநீர் வழங்குவதே ஜல் ஜீவன் திட்டத்தின் குறிக்கோளாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.