தேசிய செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் மாயமான பொறியாளர் சடலமாக மீட்பு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனதாக கருதப்பட்ட பொறியாளரை தேடும் பணி இன்று 6ம் நாளாக நடந்து வந்தது.

வயநாடு,

கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

நிலச்சரிவு

இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி கல்லாடி மீனாட்சி பாலம் பகுதியில் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதியில் இருந்து நீரோடு மண் கீழ் நோக்கி அடித்து வரப்பட்டது. அதோடு அங்குள்ள சாலை, பாலத்தை மண் மூடியது.

உயிரிழப்பு

அங்கு சாலையில் நின்ற டேங்கர் லாரியை நிலச்சரிவு அடித்து சென்றது. மேலும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் உயிரை கையில் பிடித்தபடி ஓட்டம் பிடித்தனர். ஆனால், சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர் நிலச்சரிவில் சிக்கினர். தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், வயநாடு போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவால் பலியான 7 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டிருந்தன.

கட்டுமான பொறியாளர்

இந்த நிலையில், மேலும் காணாமல் போன ஒருவரான இமாசல பிரதேசத்தை சேர்ந்த கட்டுமான பொறியாளர் விக்ரம் ராணாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தன. தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதால் சூரல்மலை-மேப்பாடி பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இரண்டு மணி நேர இடைவெளியில் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து கேரள வேளாண்மைத்துறை அமைச்சர் சித்திக் கூறுகையில், அவரது சடலம் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியிருக்கலாம் அல்லது பாறைகளால் மூடப்பட்டிருக்கலாம். எனவே, அடையாளம் காணப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் தேடுதல் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.

8 ஆக உயர்வு

இந்நிலையில், 6 நாள் போராட்டத்துக்கு பிறகு மாயமான கட்டுமான பொறியாளர் விக்ரம் ராணாவின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.