டேராடூன்
டேராடூன்-டெல்லி பசுமை வழி சாலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி உத்தராகண்ட் மாநிலத்திற்கு இன்று வருகை தந்துள்ளார். ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகியுள்ள இந்த 6 வழிகள் கொண்ட பசுமை வழி சாலையானது 210 கி.மீ. நீளம் கொண்டது. இதனால், டேராடூன் மற்றும் டெல்லி இடையேயான பயணம் 5 மணிநேரத்தில் இருந்து இரண்டரை மணிநேரம் என்ற அளவுக்கு குறைய கூடும்.
இந்த நிலையில், டேராடூன் நகருக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான மந்திரி நிதின் கட்காரி மற்றும் உத்தராகண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து, டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தட திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, பசுமை வழி சாலையை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க திரளான மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கூட்டத்தினரின் முன் பேசிய பிரதமர் மோடி, கைரேகை ஜோசியம் கூறுபவர், ஒரு நபரின் எதிர்காலம் பற்றி அவருடைய உள்ளங்கையின் ரேகைகளை பார்த்து வாழ்க்கைக்கான பலன்களை கூறுவார். இதனை நான் நாட்டின் வாழ்க்கையுடன் இணைத்து பார்க்கிறேன். அப்படியென்றால், நாட்டின் விதி ரேகை என்ன? என கேட்டார்.
அவர் தொடர்ந்து, நம்முடைய சாலைகள், நம்முடைய நெடுஞ்சாலைகள், நம்முடைய விரைவு சாலைகள், நம்முடைய வான் வழிகள், நம்முடைய ரெயில் வழிகள் மற்றும் நம்முடைய நீர் வழிகள் ஆகியவையே நம் நாட்டின் விதி ரேகைகள் ஆகும். கடந்த ஒரு தசாப்தத்தில், ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக, அதுபோன்ற விதி ரேகைகளை உருவாக்குவதற்கான பணியில் நம்முடைய நாடு ஈடுபட்டு வருகிறது என்று பேசினார்.