பெங்களூரு,
மேகதாது அணை விவகாரத்தில் யாருடைய உரிமையும் பறிக்க முயலவில்லை என கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே விளக்கமளித்துள்ளார். மேலும் தமிழக அரசின் தீர்மானத்தால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக தமிழக சட்டசபையில் இன்று கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார். உபரி நீரை மட்டுமே கர்நாடக மக்களுக்கு பயன்படுத்த முயற்சி செய்து வருகிறோம் என்றும், யாருடைய உரிமையையும் பறிக்க கர்நாடக அரசு முயற்சி செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், மேகதாது விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயார் என்று குறிப்பிட்ட பிரியங்க் கார்கே, தமிழக அரசு விரும்பினால் இந்த விவகாரத்தில் சட்ட தீர்வை தேடிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.