தேசிய செய்திகள்

தி.மு.க.வுக்கு மாற்றாக த.வெ.க. என்ற நட்பு கட்சி கிடைத்துள்ளது: உத்தவ் சிவசேனா கருத்து

இந்தியா கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மும்பை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு, விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், காங்கிரஸ் தங்களை முதுகில் குத்தி துரோகம் செய்துவிட்டதாக தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்வதால், அந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

இதனால் இந்தியா கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கருத்து தெரிவித்து உள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தி.மு.க. மட்டுமே கூட்டணியில் இருந்து சற்று விலகி நிற்க தொடங்கியுள்ளது. அதற்கு பதிலாக, தமிழ்நாட்டில் எங்களுக்கு தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) என்ற மாற்று நண்பர் கிடைத்துள்ளார்.

அ.தி.மு.க.வால் காலியிடமான மாநிலங்களவை எம்.பி. சீட்டையும் த.வெ.க. ஒதுக்கீடு மூலம் காங்கிரஸ் பெற்றுள்ளது. எனவே கூட்டணியில் பிளவு என்று சொல்ல வேண்டாம், இந்தியா கூட்டணிக்கு ஒரு மாற்று நண்பர் கிடைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் எங்கள் கட்சியின் சார்பில் யார் கலந்து கொள்வார் என்பதை உத்தவ் தாக்கரே விரைவில் முடிவு செய்வார்.

இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.