தேசிய செய்திகள்

உள்நாட்டு டிரோன் உற்பத்தியில் 2030-க்குள் உலகளாவிய மைய நாடாக நாம் உருவாக வேண்டும் - ராஜ்நாத் சிங்

டிரோன்களுக்கான மென்பொருள், இயந்திரங்கள் மற்றும் மின்கலங்கள் போன்றவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சுயசார்புடன் இந்தியா திகழ வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் 2026-ம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கான மாநாடு 2 நாள் நடைபெறுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நோக்கங்களை இந்த மாநாடு கொண்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற கருத்துருவின் அடிப்படையிலான இந்த 2 நாள் மாநாட்டில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர், இந்தியா பாதுகாப்பு தொடர்பான விசயங்களுக்கு தயாராவதற்கும், தன்னாட்சியுடன் செயல்படவும், டிரோன் உற்பத்தியில் நாம் முழுவதும் சுயசார்புடன் இருப்பது அவசியம் என கூறினார். இதனை செய்து முடிக்க உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் நாட்டுக்கு தேவையாக உள்ளது என்றும் கூறினார்.

இதற்காக, சாத்தியப்பட்ட எல்லா வகையான உதவிகளும் அரசிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் என நான் உறுதி கூறுகிறேன். நாம் அனைவரும் ஒரு நோக்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அதனால், உள்நாட்டு டிரோன் உற்பத்தியில் இந்தியாவானது, 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய மைய நாடாக உருவெடுக்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். சுயசார்பு என்பது உற்பத்தி என்றளவில் மட்டுமின்றி, உபகரணங்கள் அளவிலும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். டிரோன்களுக்கான மென்பொருள், இயந்திரங்கள் மற்றும் மின்கலங்கள் போன்றவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றும் அப்போது கூறினார்.