தேசிய செய்திகள்

மேற்காசிய பதற்ற நிலை; 63-ல் இருந்து 116 அமெரிக்க டாலராக கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு: மத்திய அமைச்சகம் தகவல்

புலம்பெயர் மக்களின் வசதிக்காக 5 கிலோ சிலிண்டர் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

புதுடெல்லி

மேற்காசியாவில் பதற்ற நிலை நீடித்து வரும் சூழலில், மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கடந்த ஜனவரியில் கச்சா எண்ணெய் கொண்ட பீப்பாய் ஒன்று 63 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்தது.

இந்த விலை கடந்த மார்ச்சில் அதிகரித்து, பீப்பாய் ஒன்று 113 அமெரிக்க டாலராக அதிகரித்தது. ஏப்ரலில், சராசரியாக 116 அமெரிக்க டாலராக விலை உள்ளது என கூறியுள்ளார்.

உலக அளவில் திடீர் விலை உயர்வு ஏற்பட்டபோதும், அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைவாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.

வீட்டுக்கு தேவையான சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், எந்தவொரு விநியோகஸ்தரிடமும் சிலிண்டர் பற்றாக்குறை என்பது இல்லை என்றும் சிலிண்டர் விநியோகம் 93 சதவீதம் என்ற அளவில் திறமையாக கையாளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதேபோன்று வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விற்பனை அதிகரித்து உள்ளது என்றும் புலம்பெயர் மக்களின் வசதிக்காக 5 கிலோ சிலிண்டர் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார். பெட்ரோலிய இயற்கை எரிவாயுக்காக புதிதாக 5.68 லட்சம் நுகர்வோர்கள் பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.