தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 2 பேர் பலி; 433 பேர் கைது

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளராக செயல்பட்டு வந்த சந்திரா என்பவரை மர்ம நபர்கள் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 4-ந்தேதி நடந்து முடிந்தது. அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு பின்னர் வன்முறை எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மேற்கு வங்காள தலைமை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் மத்திய ஆயுத படைகள் உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு பின்பு நடந்த வன்முறையில் 2 பேர் பலியாகி உள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக மொத்தம் 200 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 433 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதேபோன்று, 1,100 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர் என டி.ஜி.பி. சித் நாத் குப்தா கூறியுள்ளார்.

மே 4-ந்தேதிக்கு பின்னரும், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை தடுக்கும் நோக்கில், மத்திய ஆயுத படைகளை சேர்ந்த 500 கம்பெனி படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் ஆணையம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளராக செயல்பட்டு வந்த சந்திரா என்பவரை மர்ம நபர்கள் சுட்டு படுகொலை செய்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பவானிபூர் தொகுதியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.

அவரை சுவேந்து அதிகாரி வீழ்த்தினார். இதில் சுவேந்துக்கு ஆதரவாக தீவிர பணியாற்றியவர் சந்திரா. இதனால், சுவேந்து அதிகாரி வரலாற்று வெற்றியை பெற்றார். இந்த சூழலில், சந்திரா சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.