கொல்கத்தா
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என கடந்த 15-ந்தேதி பிற்பகலில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. இதில் 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மம்தா பானர்ஜியின் அரசியல் கோட்டையாக கருதப்படும் பவானிபூர் தொகுதியில், பா.ஜ.க. சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். எனினும், என்னுடைய விருப்பத்திற்குரிய நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிடுவேன் என அதிகாரி கூறினார்.
கடந்த 2021-ம் ஆண்டு நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட அதிகாரி, அப்போது அந்த தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மம்தாவை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். மம்தா பானர்ஜி 4-வது முறையாக இந்த முறை தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார்.