தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் மந்திரி சபை விரிவாக்கம் - 35 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு

மேற்கு வங்க முதல் மந்திரி சுவேந்து அதிகாரியின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 35 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, கடந்த மே 9-ஆம் தேதி சுவேந்து அதிகாரி மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் திலிப் கோஷ், அக்னிமித்ரா பால், அஷோக் கீர்த்தனியா, நிசித் பிரமாணிக் மற்றும் சுதிராம் துது ஆகியோர் மந்திரிகளாக பொறுப்பேற்றனர்.

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி, பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர், என்டிஏ கூட்டணியைச் சேர்ந்த பல மாநில முதல் மந்திரிகள் மற்றும் துணை முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

35 பேர் பதவியேற்பு

இந்த நிலையில், மேற்கு வங்க அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தீபக் பர்மன், அர்ஜுன் சிங், ஷங்கர் கோஷ், கவுரி சங்கர் கோஷ், தபஸ் ராய், மனோஜ் குமார் ஓரன், ஜகந்நாத் சட்டோபாத்யாய, அஜோய் போத்தார், ஸ்வபன் தாஸ் குப்தா, ஷரத்வாத் முகர்ஜி, கல்யாண் சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 எம்எல்ஏக்கள் மந்திரிகளாக இன்று பதவியேற்றனர்.

41 ஆக உயர்வு

லோக்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுவேந்து அதிகாரி, மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில், அரசின் அமைச்சரவை உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 44 ஆக இருக்க முடியும். தற்போதைய அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு மந்திரிகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 3 பேரை மந்திரிகளாக நியமிக்கும் இடம் உள்ளது.