தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜியின் வாகனம் மீது தாக்குதல்

மம்தா பானர்ஜியின் வாகனத்தை சூழ்ந்து கொண்டு ‘திருடி’ என்றும் ‘திருடர்களின் ராணி’ என்றும் கோஷமிட்டனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பிர்ஜு கியோட். இவரது மனைவி ஜெனி சர்மா, காஞ்ச்ராபாரா நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்நிலையில், பிர்ஜு கியோட் மீது மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்து கடந்த வெள்ளிக்கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து கோர்ட்டு அவரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், சனிக்கிழமை(நேற்று) பிர்ஜு கியோட் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது கணவரை போலீசார் தாக்கியதே அவரது உயிரிழப்புக்கு காரணம் என உயிரிழந்த பிர்ஜுவின் மனைவி ஜெனி சர்மா குற்றம்சாட்டியுள்ளார். இருப்பினும் காவல்துறை தரப்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், உயிரிழந்த தனது கட்சி தொண்டர் பிர்ஜுவின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி வருகை தந்தார். அப்போது அவரது வாகனத்தை சிலர் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர். கற்களையும், மணலையும் அள்ளி வீசிய அவர்கள், ‘திருடி’ என்றும் ‘திருடர்களின் ராணி’ என்றும் கோஷமிட்டனர். இதையடுத்து அவரது வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “எனது வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். எனது தலையை அவர்கள் உடைத்திருப்பார்கள். அந்த இடத்திலேயே என் உயிர் போயிருக்கும். நான் அந்த பகுதிக்கு செல்லப்போவதாக காவல்துறைக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. காவல்துறை சமூக விரோதிகளைப் பாதுகாத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் சமூக விரோதிகளின் கைகளுக்குச் சென்றுவிட்டது” என்று விமர்சித்தார்.