கொல்கத்தா,
தமிழ்நாடு, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டோடு சேர்த்து கடந்த 23-ந்தேதி மேற்கு வங்காளத்தில் உள்ள 152 தொகுதிகளுக்கு முதல்-கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதியுள்ள 142 தொகுதிகளுக்கு இன்று 2-வது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரசும் வேட்பாளர்களை களத்தில் இறக்கி உள்ளது. 2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன் தினம் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த முறை பவானிபூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவர், 2021 தேர்தலில் நந்திகிராமத்தில் தன்னை தோற்கடித்த, தனது பரம எதிரியான பா.ஜனதாவின் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். எனவே அங்கு கடும் போட்டியும், பரபரப்பும் நிலவுகிறது.
2-கட்ட தேர்தலில் 3 கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 837 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 142 தொகுதிகளிலும் 41 ஆயிரத்து 1 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தேர்தலை சுமூகமாக நடத்துவதற்காக மாநில போலீசாருடன் 2,321 கம்பெனி மத்திய போலீஸ் படையும் களம் இறக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.