கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி காணப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் கடந்த 21-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் இன்று (23.4.2026) முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அசன்சோல் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக பெண் வேட்பாளர் அக்னிமித்ரா மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. பன்பூர் நகரின் ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டு திரும்பியபோது ஒரு கும்பல் அவரது கார் மீது கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதில், காரின் பின்பக்க கண்ணாடி முழுமையாக நொறுங்கியது. வேட்பாளர் அக்னிமித்ரா காயமின்றி உயிர்தப்பினார்.
இத்தாக்குதல் சம்பவம் தோடர்பாக வேட்பாளர் அக்னிமித்ரா கூறியதாவது:-
எனது கார் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி உள்ளனர். ரஹ்மத் நகரில் உள்ள சிறுபான்மையினர் பகுதிக்குச் சென்றபோது, கார் மீது ஒரு பெரிய பாறாங்கல்லை வீசினர். இதனால் காரின் பின்பகுதி முழுவதும் உருக்குலைந்துபோனது; கண்ணாடி முற்றிலுமாக நொறுங்கிவிட்டது.
கடவுளின் அருளால், எனக்கோ அல்லது எனது பாதுகாவலர்களுக்கோ காயம் ஏற்படவில்லை. காரின் பின்பகுதியில் அமர்ந்திருந்த எனது செயலாளர் லேசான காயமடைந்தார். இது போன்ற அராஜக சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. இச்சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.