தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: ராகுல், உங்கள் அக்கறைக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி : எம்.பி. அபிஷேக் பானர்ஜி

நான் மக்களுக்கு முன்னால் மட்டுமே தலைவணங்குவேன், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னால் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் என எம்.பி. அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 15 ஆண்டுகளாக முடிசூடா மன்னராக இருந்த மம்தா பானர்ஜியும், அவரது கட்சியுமான திரிணாமுல் காங்கிரசும் வீழ்த்தப்பட்டது. அம்மாநிலத்தில் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

தன்னார்வ தொண்டரின் மரணம்

தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தலுக்கு பின்பும் அங்கு மோதல், கலவரம் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனர்பூரை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.அபிஷேக் பானர்ஜி நேற்று காலை சென்றார்.

ஆறுதல் தெரிவித்தார்

அப்போது கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்து சென்றார். அவரை உள்ளூரை சேர்ந்த சிலர் வழி மறித்து தாக்குதல் நடத்தினர். அவர் மீது முட்டைகளையும் கல் வீசியும் தாக்குதல் நடத்தினர். அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டன. இவர் மீதான தாக்குதல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட தொண்டரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில் தன் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆதரவுக்கு நன்றி

ராகுல், உங்கள் அக்கறைக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி. இந்தியாவின் ஆன்மாவை காக்கவும், அதன் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்கவும், நமது அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள விழுமியங்களை நிலைநிறுத்தவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, உறுதியுடன் போராடி வருகிறோம்.

ஒன்றுபட்டு நின்றேன்

கடந்த ஆண்டு, 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்த அனைத்து கட்சி குழுவில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி நான் ஐந்து நாடுகளுக்கு பயணம் செய்தேன். அங்கே நான் எனது நாட்டிற்காக பரிந்து பேசினேன்; பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நின்றேன்.

இன்றோ, தேசபக்தியின் காவலர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசியல் வன்முறைக்கும், அரசால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்திற்கும் பலியான ஒருவராக நான் நிற்கிறேன்.

தேசபக்தர்

இதுவே இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் (BJP) எதார்த்த நிலையாகும். நீங்கள் அவர்களை ஆதரித்தால், நீங்கள் ஒரு தேசபக்தர். நீங்கள் அவர்களை கேள்வி கேட்டால், நீங்கள் ஒரு இலக்காக மாற்றப்படுகிறீர்கள். நீங்கள் அவர்களுடன் நின்றால், நீங்கள் கொண்டாடப்படுகிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு எதிராக நின்றால், அவர்கள் உங்களை மௌனமாக்க முயல்கிறார்கள்.

தலைவணங்க மாட்டேன்

எனது கொள்கைகளை துறந்து சுகபோகங்களை அனுபவிப்பதை விட, ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணியில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதையே நான் விரும்புவேன். அதிகாரம் என்பது தற்காலிகமானது. மக்களின் விருப்பமே நிரந்தரமானது. நான் மக்களுக்கு முன்னால் மட்டுமே தலைவணங்குவேன்; அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னால் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்.

மக்களின் குரலே

ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும், நமது தேசத்தை பிளவுபடுத்தவும் முயல்பவர்களுக்கு எதிரான நமது போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம். இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது; அச்சம், வெறுப்பு, வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சார்ந்த அரசியல் தோற்கடிக்கப்படுவதையும், மக்களின் குரலே இறுதியில் வெல்வதையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி செய்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.