தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: அரசு மருத்துவமனையில் பெண் உடலை கடித்து குதறிய எலிகள்

பெண் உடலின் விரல்களில் கடித்த அடையாளம் காணப்பட்டது.

கொல்கத்தா

மேற்கு வங்காளம் அரசு மருத்துவமனையில் பெண் உடலை எலிகள் கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் அந்துல் பகுதியை சேர்ந்த பெண் அல்பனா தேய். 6 ஆண்டுகளாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த வியாழக்கிழமை கொல்கத்தாவில் உள்ள மாணிக்தலா இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தரப்பில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ச்சி

அவருடைய உடலை வாங்க உறவினர்கள் சென்றனர். அவர்கள் பெண் உடலை சுற்றியிருந்த துணியை அகற்றி பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனென்றால், பெண் உடலின் விரல்களில் கடித்த அடையாளம் காணப்பட்டது. கண் இமை, உதடுகள் ஆகியவற்றில் ஒரு பகுதியை காணவில்லை. உடலை எலிகள் கடித்து குதறியதுபோல் தோன்றுவதாக ஒரு உறவினர் தெரிவித்தார். இதுதொடர்பாக நடந்த முதல்கட்ட விசாரணையில், எலிகள் கடித்திருக்கலாம் என்று தெரிய வந்தது.

இதுதொடர்பாக வங்காள சுகாதார துறை தரப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. பெண்ணின் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழல் பற்றி ஆய்வு செய்து, 3 நாட்களில் விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT