கொல்கத்தா,
தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் கவர்னராக இருந்தவர் ஆர்.என். ரவி. அவர் தற்போது தமிழகத்தில் இருந்து மாற்றப்பட்டு, மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திற்கு கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு கூடுதல் ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.மேற்கு வங்காள கவர்னராக ஆர்.என். ரவி நேற்று பதவியேற்றார். அவருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார்.
அப்போது கவர்னர் ஆர்.என். ரவியிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்காளம் சிறப்பாக இருக்கும். மேற்கு வங்காள கலாசாரம் வித்தியாசமானது. வங்காளத்தை யாருக்கு பிடிக்குமோ அவர்களைத்தான் மேற்கு வங்காள மக்களுக்கு பிடிக்கும்” என்று கூறினார்.
தமிழக கவர்னராக ஆர்.என். ரவி இருந்த போது தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இந்த நிலையில், தற்போது மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதால் மம்தா பானர்ஜியுடன் மோதல் போக்கை கையாள்வாரா? இல்லை அனுசரணையாக செல்வாரா? என்ற கேள்வி அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.