கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருக்கின்றது. இதையடுத்து பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி அக்கட்சியின் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார். பின்னர் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த நிலையில், இன்று மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளார்.
முன்னதாக பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். முதல்முறையாக ஆட்சியை பா.ஜ.க. அங்கு கைப்பற்றி உள்ளது. இந்த சூழலில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது.
அதில், சட்டசபை பா.ஜ.க. கட்சி தலைவராக (முதல்-மந்திரி) சுவேந்து அதிகாரி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் பாஜக அரசுக்கு இரண்டு துணை முதல்-மந்திரிகள் முக்கிய பொறுப்புகளை மேற்கொள்வார்கள் என கட்சி தலைவர்கள் குறிப்பிட்டனர். கட்சியின் மூத்த தலைவர்களான திலீப் கோஷ், மற்றும் பாஜக மாநிலத தலைவர் சமிக் பட்டாச்சார்யா ஆகியோருக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு இன்று (சனிக்கிழமை) பதவியேற்கிறது. கொல்கத்தாவில் உள்ள படைவீரர் அணிவகுப்பு மைதானத்தில் விழா நடக்கிறது. சுவேந்து அதிகாரி மற்றும் புதிய மந்திரிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வதால், கொல்கத்தாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதிய முதல்-மந்திரியாக பதவியேற்கும் சுவேந்து அதிகாரி, புர்பா மெதினிபூர் மாவட்டம் கற்குளி கிராமத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை பழம்பெரும் அரசியல்வாதியான சிசிர் அதிகாரி.
சுவேந்து, அவர் வசித்த பகுதியிலேயே பள்ளி, கல்லூரியில் படித்தார். தொடர்ந்து கொல்கத்தா ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவராக இருந்தார். அவரது அரசில் போக்குவரத்து, சுற்றுச்சூழல் ஆகிய இலாகாக்களின் மந்திரியாக இருந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், பா.ஜ.க.வில் சேர்ந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை தோற்கடித்தார். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக அதிரடியாக செயல்பட்டார். வெளியிலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மாநிலத்தில் பா.ஜ.க.வின் முகமாக மாறினார்.