தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் மரண தண்டனை; பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது என்ன? பிருந்தா காரத் கேள்வி

நிர்பயா வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து பேசிய பிருந்தா காரத் பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது என்ன? என கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் குற்றவாளிகள் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்று அவர்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத் பேசுகையில், கொள்கை அளவில் மரண தண்டனைக்கு எதிரானவள் நான், ஆனால் இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு மரண தண்டனையானது தேவையானது. நம்முடைய நாட்டில் நீதித்துறைதில் பாரபட்சமான நடைமுறை காணப்படுவதே நான் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணம் ஆகும். பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது என்ன?, என கேள்வி எழுப்பி உள்ளார்.

பில்கிஸ் பானு வழக்கு

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது ஆமதாபாத் பகுதியை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் 10க்கும் மேற்பட்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது.

இச்சம்பவம் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்த போது, அதனை ஏற்காமல் அலட்சியமாக செயல்பட்ட 5 போலீசாரையும், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க தவறிய 2 டாக்டர்களும் கைதானார்கள்.

இந்த வழக்கு விசாரணை ஆமதாபாத் கோர்ட்டில் நடந்தது. அப்போது, குற்றவாளிகள் சாட்சியங்களை அழிக்கக்கூடும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில், பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, வழக்கு விசாரணையை மும்பை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றியது.

இதனிடையே, கைதானவர்களில் ஒருவர் விசாரணையின்போது, உயிர் இழந்தார். வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு கோர்ட்டு நீதிபதி, 12 பேரை (இறந்தவர் உள்பட) குற்றவாளிகள் என்று அறிவித்ததுடன், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், போலீசார், டாக்டர்கள் உள்பட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரி, குற்றவாளிகள் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அவர்களில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி சி.பி.ஐ. தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 7 பேரை விடுதலை செய்ததற்கும் சி.பி.ஐ. ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவர்களுக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதிசெய்தனர். மேலும் போலீசார், டாக்டர்கள் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையையும் ரத்து செய்ததுடன், அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தனர்.