புதுடெல்லி
அடுத்த தலைமுறை பசுமை சரவெடி என்றால் என்ன? என்றும் அதன் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படும். இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி வர போகிறது. இந்த பண்டிகையின்போது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலையிலேயே எழுந்து, குளித்து, புது ஆடைகளை உடுத்தி, பலகாரங்களை பகிர்ந்து உண்டு, மகிழ்வர்.
இதில், சிறுவர்கள் அதிகம் விரும்பி வெடிக்கும் பட்டாசுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எனினும், பட்டாசுகளால் மாசு ஏற்படாத வகையில், பசுமை பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது, பசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டும் என அந்நீதிமன்றம் கடந்த 2018-ல் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, சரவெடி தயாரிக்கவும், பசுமை பட்டாசு பயன்படுத்தவும் அனுமதி வேண்டும் என, 'டான்பாமா' எனப்படும் தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், நீதிமன்றம் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அடுத்த தலைமுறை பசுமை சரவெடிகளை தயாரிக்க அனுமதி வழங்கி நீதிபதிகள் சுந்தரேஷ், பிரசன்னா பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து 'டான்பாமா' தலைவர் கணேசன் கூறியதாவது: நுாற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்ட இந்திய பட்டாசு தொழில், குறிப்பாக சிவகாசி பட்டாசு தொழில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அடுத்த தலைமுறை பசுமை சரவெடிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி, இந்தியாவின் பாரம்பரிய பட்டாசு தொழிலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அறிவியல் முன்னேற்றம் மற்றும் நிலையான உற்பத்தி நடைமுறைகளை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.
அடுத்த தலைமுறை பசுமை பட்டாசுகள் தொடர்பான இறுதி முடிவு இன்னும் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்காக வருகிற 15-ந்தேதி பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டுதல்கள், சட்ட விதிமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்புத் தரங்களை முழுமையாக பின்பற்ற 'டான்பாமா' உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம், தற்போது நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ள அடுத்த தலைமுறை பசுமை சரவெடிகள் என்பவை, பாரம்பரியமான சரவெடிகளை போலவே பயன்படுத்தப்பட்டாலும், அவை சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், வெடித்த பிறகு சேரும் குப்பையையும் பெருமளவு குறைக்கும் வகையில் தயாரிக்கப்படுபவை. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய வகை பசுமை பட்டாசுகள், பாதுகாப்பு தரநிலைகளை பின்பற்றும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.