தேசிய செய்திகள்

‘பட்டாசு வெடிப்பதற்கும், மதத்திற்கும் என்ன சம்பந்தம்’ - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

அகல்விளக்குகளுடன் தீபாவளியை கொண்டாடும் பழக்கத்தை ஊக்குவிப்பதே சிறந்த அணுகுமுறை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்(என்.சி.ஆர்.) பகுதிகளில் காற்று மாசுபாடு மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

பட்டாசு வியாபாரிகள்

இந்த வழக்கு விசாரணையின்போது, தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகளை வெடிக்க அனுமதிப்பது குறித்த விவாதம் எழுந்தது. அப்போது பட்டாசு வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சாய் தீபக், டெல்லியில் தற்போது பட்டாசு வெடிக்க தடை அமலில் உள்ளதாக தெரிவித்தார்.

நேர வரம்பு

தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங் ஆஜராகி, தீபாவளி பண்டிகையின்போது குறைந்த நேரத்திற்கு கூட பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். குடிமக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியமே முதன்மையானது என்று அவர் கூறினார்.

பட்டாசு வெடிப்பதற்கு 1 அல்லது 2 மணி நேர வரம்பு வழங்குவது நியாயமானதாகத் தோன்றினாலும், அது கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், இனிமேலும் நடைமுறைப்படுத்தப்படாது என்றும் அவர் வாதிட்டார்.

மேலும், பட்டாசுகள் மதத்தின் ஒரு பகுதியல்ல என்று குறிப்பிட்ட அவர், வழிபாடுதான் மதத்தின் அங்கம் என்று கூறினார். அதோடு, இந்த விவகாரத்தை காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையத்திடம்(CAQM) விட்டுவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இது தொடர்பாக 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது பட்டாசு உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை மீதான தடையை நீக்குவதற்கு சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.

தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான தடையை தளர்த்தியது. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் (NEERI) அங்கீகரிக்கப்பட்ட, சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யவும், குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் வெடிக்கவும் கோர்ட்டு அனுமதித்தது.

மத நம்பிக்கை

இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி சூர்யகாந்த், “நாங்கள் மத நம்பிக்கைகளை புன்படுத்த மாட்டோம். மக்கள் சுயபரிசோதனை செய்து கொள்வதே சிறந்த வழி. இதில் ஒரு சமநிலையான அணுகுமுறை தேவை.

பட்டாசு வெடிப்பதற்கும், மதத்திற்கும் என்ன சம்பந்தம்? எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு முன்பு நீதிமன்றம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த பட்டாசுகள் தீங்கு விளைவிப்பவை என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அகல்விளக்குகளுடன் தீபாவளியை கொண்டாடும் பழக்கத்தை ஊக்குவிப்பதுமே சிறந்த அணுகுமுறையாகும்” என்று தெரிவித்தார்.

இன்றைய விசாரணையின்போது பட்டாசு வெடிப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் எதையும் கோர்ட்டு வழங்கவில்லை. இந்த விவகாரம் குறித்து காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT