புதுடெல்லி,
தற்போது நிலவிவரும் அமெரிக்க-ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிகப்படியான டாலர்களை செலவிட வேண்டியுள்ளது. இந்தியா தனது எரிசக்தி மற்றும் தங்கத் தேவைகளுக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது.
அதில் எரிசக்தியில் வரக்கூடிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதனை இறக்குமதி செய்வதற்கு அதிகம் செலவிட வேண்டியிருப்பதால், அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனை ஈடுகட்ட அத்தியாவசியமற்ற இறக் குமதி என கருதப்படும் தங்கம், வெள்ளியை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு கொண்டு வந்த முயற்சிதான், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு.
கடந்த நிதியாண்டில் (2025-26) மட்டும் 72 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6.89 லட்சம் கோடி மதிப்பில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு சாதனை எட்டப்பட்டிருந்தாலும், இது நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பை வெகுவாக குறைத்தும் இருக்கிறது. தங்கம், வெள்ளி இறக்குமதியை குறைப்பதன் வாயிலாக வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், வீழ்ச்சி அடைந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும் இந்த வரி உயர்வு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இறக்குமதியை குறைப்பதன் மூலம் டாலருக்கான தேவையை குறைத்து ரூபாய் மதிப்பை நிலைநிறுத்தவும் மத்திய அரசு முயற்சிக்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு நிறுத்த மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.