புதுடெல்லி
இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.
நீட் மறுதேர்வு, வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. வினாத்தாள்கள் மீண்டும் கசியாமல் இருக்க இந்த முறை பல அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மே 3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியதால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதுபற்றி அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பாவெல் துரோவ் கூறும்போது, சில பயனாளர்கள் வினாத்தாள்களை கசிய விட்டதற்காக இந்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், டெலிகிராமுக்கு ஒரு வார காலத்திற்கு தடை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், தேர்வுக்கான தகவல்களை கசிய விட்ட தேர்வு நடத்தும் முகமையில் உள்ள நபர்களுக்கு பதிலாக, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் கூடுதலான டெலிகிராம் பயனாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த தடையால் எதுவும் நிற்க போவதில்லை. டெலிகிராம் தவிர்த்த பிற செயலிகள் மூலம் வினாத்தாள் கசிவுகள் உள்ளிட்டவை நடைபெற போகின்றன என்று காட்டத்துடன் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, இந்தியாவின் ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம், இந்தியாவுக்கு வெளியே (ஐக்கிய அரபு அமீரகம் உள்பட) லட்சக்கணக்கான பயனாளர்களுக்கு டெலிகிராம் கிடைக்க விடாமல் நாசவேலையில் ஈடுபட்டு உள்ளது என கூறினார். பி.ஜி.பி. ஹைஜாக்கிங் என்ற அடாவடித்தன வழியில் இதனை செய்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி உரிமையை மெட்டா நிறுவனம் வைத்துள்ளது. வாட்ஸ்அப்பின் பின்னணியாக செயல்படும் மெட்டா நிறுவனம், போட்டிக்கான காரணியாக இதனை செய்திருக்க கூடும் என கூறினார்.
இந்தியாவில் சமீபத்தில் டெலிகிராமுக்கு தடை விதித்த விவகாரத்தின் பின்னணியிலும், ரிலையன்ஸ் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் உள்ளன என்றாலும் நான் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என கூறினார்.
எனினும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோவில், மெட்டா நிறுவனம் சிறிய அளவில் பங்கு வைத்திருக்கிறது. கடலுக்கு அடியிலான கேபிள்களை ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் என்ற மற்றொரு குழுமம் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் தொடர்பு எதுவும் இல்லை என தகவல் தெரிவிக்கின்றது.