தேசிய செய்திகள்

'யூசர்நேம்' அம்சம் குறித்து விளக்கம் அளித்த வாட்ஸ்அப்... பாதுகாப்பு வசதிகள் என்னென்ன?

பிரபலங்களின் பெயர்களை யாரும் போலியான பயன்படுத்த முடியாத வகையில் முடக்கி வைக்கப்பட்டும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 'யூசர்நேம்' (Username) அம்சத்தை பாதுகாப்பு ஆய்வுகள் நிறைவடையும் வரை அறிமுகப்படுத்தக் கூடாது என மத்திய அரசு மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் விரிவான விளக்கம் அளித்துள்ளது.

பாதுகாப்பு குறித்து வாட்ஸ்அப் விளக்கம்

வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள், பொதுத்துறை அமைப்புகள், பிரபலங்கள் மற்றும் மெட்டாவால் சான்றளிக்கப்பட்ட (Verified) கணக்குகளின் பெயர்களை யாரும் போலியாக பயன்படுத்த முடியாத வகையில், அந்த பயனர் பெயர்கள் முன்கூட்டியே பாதுகாக்கப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்ற சமூக வலைத்தளங்களைப் போல வாட்ஸ்அப்பில் ஒரு பொதுவான பெயரைத் தேடி யாரையும் கண்டுபிடிக்க முடியாது என்றும், ஒருவரின் துல்லியமான பயனர் பெயர் தெரிந்தால் மட்டுமே அவருடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் நிறுவனம் விளக்கியுள்ளது.

'யூசர்நேம் கீ' மூலம் கூடுதல் பாதுகாப்பு

வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் கூறுகையில், பயனர் பெயர் என்பது முழுக்க முழுக்க பயனரின் விருப்பத் தேர்வாகும்; போன் எண்ணே கணக்கின் முதன்மை அடையாளமாகத் தொடரும் என்று தெரிவித்துள்ளது.

தேவையற்ற நபர்கள் தொடர்பு கொள்வதைத் தடுக்க 'யூசர்நேம் கீ' (Username Key) என்ற கூடுதல் பாதுகாப்பு அம்சமும் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு குறியீடு (Key) தெரிந்தால் மட்டுமே புதிய உரையாடலை தொடங்க முடியும்.

அதேபோல், புதிய பயனர் பெயர் மூலம் முதன்முறையாக யாராவது தொடர்பு கொண்டால், அந்தக் கணக்கு எந்த நாட்டைச் சேர்ந்தது, எப்போது உருவாக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை எச்சரிக்கை தகவலாக வாட்ஸ்அப் பயனர்களுக்குக் காண்பிக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பரிசீலனைக்குப் பிறகே, வாட்ஸ்அப்பின் 'யூசர்நேம்' அம்சம் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.