தேசிய செய்திகள்

தேசிய கொடியேந்தியது குற்றமா? போராட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்வேன் - அபிஜீத் திப்கே

இந்த சர்வாதிகார போக்கை கண்டித்து தங்களது சட்டக்குழு நீதிமன்றத்தை நாட உள்ளதாக அபிஜீத் திப்கே தெரிவித்தார்.

மும்பை,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மூலம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் வாக்குகளை திருடி விட்டதாக 'இந்தியா' கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி கடந்த 6-ந் தேதியில் இருந்து போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் விஸ்வரூபம் எடுத்து உள்ளன. தேர்தல் கமிஷன் நோக்கி பேரணி, ஜந்தர் மந்தர் தர்ணா, மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமைதிப்போராட்டம் என 'இந்தியா' கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்ல உள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மராட்டிய மாநிலம், ஹிங்கோலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கைது செய்யப்பட்ட எங்களது தலைவர்களை வக்கீல்கள் கூட சந்திக்க டெல்லி போலீசார் அனுமதிக்கவில்லை. இது சட்டத்தின் ஆட்சியை மீறிய செயல். டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கை ஒரு கடத்தல் சம்பவத்திற்கு சமமானது. பாரத நாட்டில் தேசியக்கொடியை ஏந்துவதும், ஏற்றுவதும் எப்போதிலிருந்து குற்றமாக மாறியது?. ஜந்தர் மந்தரில் தேசியக்கொடி ஏற்றியதை குற்றம் என்று நினைப்பவர்கள் தேசத்துரோகிகள். இந்த சர்வாதிகார போக்கை கண்டித்து தங்களது சட்டக்குழு நீதிமன்றத்தை நாடவுள்ளது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி, டெல்லியில் புதன்கிழமை (இன்று) நடக்கவுள்ள போராட்டத்தில் பங்கேற்க தான் டெல்லி செல்லவிருப்பதாக கூறிய அபிஜீத் திப்கே, 'போலீசார் என்னை வழியிலேயே தடுத்து நிறுத்தினால், நான் எங்கு நிறுத்தப்படுகிறேனோ அங்கிருந்தே எனது போராட்டத்தை தொடங்குவேன் என்றும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT