தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டுக்கு யார் பொறுப்பு - பிரியங்கா காந்தி கேள்வி

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டது துரதிருஷ்டவசமானது, அவமானகரமானது என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட் டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு பக்தர்களின் காணிக்கையும் குவிந்து வருகிறது. இந்த காணிக்கையில் முறைகேடு நடப்பதாக சமாஜ்வாடி கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கடந்த 7-ந்தேதி குற்றச்சாட்டை தெரிவித்தார். இது மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே நேரம் பக்தர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை உரு வாக்கியது. மாநிலத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்த இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் கோரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அமைத்தார்.

இந்த குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இந்த புகார் தொடர்பாக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் கிருஷ்ண மோகன் என்ப வர் போலீசில் புகார் அளித்தார். அதேநேரம் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தங்கள் முதற்கட்ட அறிக்கையை நேற்று முன்தினம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பித்தனர். இந்த விவகாரத்தில் 8 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டது துரதிருஷ்டவசமானது, அவமானகரமானது என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கேரளத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “அயோத்தி ராமர் கோயிலுக்கு நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள், காணிக்கைகளை வழங்கி உள்ளனர். இப்போது, அந்த காணிக்கை திருடப்பட்டதாக தெரிகிறது. இதனை துரதிருஷ்டவசமானதாகவும், அவமானகரமானதாகவும் நான் கருதுகிறேன். இதற்கு யார் பொறுப்பு? நீங்கள்தான் இதைச் சேகரித்தீர்கள் என்றால், அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.