தேசிய செய்திகள்

கேரளாவில் புதிய முதல் மந்திரி யார்? நீடிக்கும் இழுபறியால் காங்கிரஸ் கட்சியினர் விரக்தி

முதல்-மந்திரி விஷயத்தில் உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயலும் நிலையில், முதல்-மந்திரி யார்? என்பதில் கடும் இழுபறி நிலவி வருகிறது.காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கடந்த ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீஷன், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா ஆகிய 3 பேரும் முதல்-மந்திரி பதவிக்கு போட்டியிடுவதால், காங்கிரஸ் தலைமை சிக்கலில் உள்ளது.

3 பேரையும் சமரசப்படுத்தி ஒருவரை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.இதனால் தேர்தல் முடிவு வெளியாகி இன்று 9-வது நாளாகியும் முதல்-மந்திரி தேர்வில் குழப்பம் நீடித்து வருகிறது.

நேற்று டெல்லியில் ராகுல் காந்தி, கேரள மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களை அழைத்து கருத்துகளை கேட்டார். ஆனாலும் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் கேரள மாநில காங்கிரஸ் கட்சியினரும் தொண்டர்களும் விரக்தியில் உள்ளனர்.இந்த நிலை நீடித்தால், கட்சியினர் மட்டுமின்றி மக்களின் கோபத்தையும் காங்கிரஸ் சந்திக்க நேரிடும் என்று மூத்த தலைவரான கே. முரளீதரன், ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டணியினரும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் முதல்-மந்திரி விஷயத்தில் உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. அநேகமாக இன்று காங்கிரஸ் தலைமை முதல்-மந்திரி யார் என்பதை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநில காங்கிரசாரும் இதே எதிர்பார்ப்பில் உள்ளனர்.