பெங்களூரு,
நாட்டிலேயே மிக நீளமானதும், ஆசியாவில் 2-வது மிகப்பெரிய பாலமுமான போகிபீல் இரு அடுக்கு ரயில்-சாலை பாலம் திறந்து வைக்கப்பட்டது. 4.9 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்திற்கு 1997-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவேகவுடா அடிக்கல் நாட்டினார். 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பணிகளை துவக்கி வைத்தார்.
21 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டி முடிக்கப்பட்ட இந்த போகிபீல் பாலத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு, அழைப்பு விடுக்கப்படாததற்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா அதிருப்தி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தேவேகவுடா, நான் பிரதமராக இருந்தபோது, காஷ்மீர் ரயில் பாதை, டெல்லி மெட்ரோ, போகிபீல் ரயில் சாலை பாலம் ஆகிய திட்டங்களுக்கெல்லாம் தலா ரூ.100 கோடி விடுவித்து ஒப்புதல் கொடுத்தேன். அடிக்கல்லும் என்னால் நாட்டப்பட்டது. ஆனால், மக்கள் இன்று என்னை மறந்து விட்டனர் என்றார்.
ரயில் சாலை பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தேவேகவுடா, அய்யோ ராமா! என்னை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள்? சில செய்தித்தாள்கள் மட்டும் இதைப்பற்றி குறிப்பிட்டு இருக்கும் என்றார்.