தேசிய செய்திகள்

தசரா ஊர்வலத்தில் ‘சோமண்ணா’ யானை மிரண்டு ஓடியது ஏன்? - அரசிடம் வனத்துறை அறிக்கை தாக்கல்

இந்த சம்பவத்தில் வனத்துறை அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் தரப்பில் எந்த விதமான அலட்சியமும் கண்டறியப்படவில்லை.

சிவமொக்கா,

சிவமொக்காவில் தசரா ஊர்வலத்தில் 'சோமண்ணா' யானை மிரண்டு ஏன் ஓடியது? என்பது குறித்து அரசிடம் வனத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அறிக்கை

சிவமொக்கா தசரா ஊர்வலத்தின் போது வெள்ளி அம்பாரியை 'சோமண்ணா' என்ற யானை சுமந்து சென்றது. அப்போது, திடீரென அந்த யானை அங்கிருந்து பயந்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வனத்துறை நடத்திய விசாரணை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளன.

சிவமொக்காவின் பிராந்திய வன பாதுகாவலர் ஹனுமந்தப்பா அரசிடம் சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கையில், யானை மிரண்டு ஓடியதற்கான உண்மையான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

அரசின் முறையான அனுமதியுடன், சக்ரேபைலு யானைகள் முகாமில் சோமண்ணா, பகதூர் மற்றும் சாகர் ஆகிய 3 யானைகளுக்கு கடந்த 7-ந் தேதி முதல் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு, சத்தான உணவுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, 15-ந் தேதி சிவமொக்காவுக்கு வரவழைக்கப்பட்டு, 16-ந் தேதியில் இருந்து டவுன் சூழலிலும் பயிற்சி கொடுக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள் மற்றும் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையின்படியே சோமண்ணா யானை வெள்ளி அம்பாரியை சுமக்க தேர்ந்தெடுக்கப்பட்டது. வழக்கம்போல் ராமண்ணா சிரேஷ்டி பூங்கா அருகில் ஊர்வலம் சென்றபோது, கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் ஊர்வலத்தின் வேகம் குறைந்தது. இதனால் அம்பாரியை சுமந்த சோமண்ணாவின் நடையும் மந்தமானது. அப்போது யானை பக்கவாட்டில் திரும்பியபோது, பாகன்கள் அது சிறுநீர் கழிக்க முயற்சிப்பதாக கருதினர். ஆனால், அப்போது சோமண்ணா திரும்பிய சமயத்தில் பின்னால் சாகர் மற்றும் பகதூர் யானைகள் வருவதை கண்டு திடீரென மிரண்டுள்ளது.

அதிகப்படியான கூட்ட நெரிசல்

இதனால், அது மற்ற யானைகளை தள்ளிவிட்டு கூட்டத்தோடு ஓட்டம் பிடித்தது. சோமண்ணா ஒரு காட்டு யானையில் இருந்து கும்கியாக மாற்றப்பட்ட யானை என்பதால், அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் பின்தொடர்ந்து வந்த மற்ற யானைகளை கண்டு மிரண்டதே இந்த நிகழ்வுக்கு காரணம், என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் வனத்துறை அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் தரப்பில் எந்த விதமான அலட்சியமும் கண்டறியப்படவில்லை என்பதால், ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT