தேசிய செய்திகள்

மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்தது ஏன்..? - கனிமொழி விளக்கம்

தி.மு.க. வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மசோதாவில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

33 சதவீதம் இடஒதுக்கீடு

இந்தியாவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. அதேவேளை மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதில் இருந்து மகளிருக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீதம் அதிகரிக்க வகை செய்வதுடன் இந்த நடைமுறை அடுத்த 25 ஆண்டுகள் அமலில் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும்போது தற்போது உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 850 வரை (மாநிலங்கள் 815, யூனியன் பிரதேசங்கள் 35) அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மசோதா தாக்கல்

இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மசோதா போதிய ஆதரவு இன்றி வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதேவேளை, தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் ( 30-ம் தேதி) மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனிடையே தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

கனிமொழி விளக்கம்

இந்த சூழலில், டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி தலைமையில் திமுக எம்பிக்கள் சந்தித்து பேசினர். அமித்ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது டிஆர் பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிலையில் மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

59 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொகுதி மறுவரையறை மசோதாவை தி.மு.க. ஆதரிப்பது குறித்தும், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் அமித் ஷாவிடம் பேசினோம்.

தொகுதி மறுவரையறை பற்றி யாரும் பேசாத காலத்திலேயே பேசிய கட்சிதான் தி.மு.க.. தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

கடந்த மசோதாவில் 50 சதவீத உயர்வு குறித்து எதுவும் குறிப்பிடாமல் இருந்தது. தி.மு.க. வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மசோதாவில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

No Delimitation இன்று நாங்கள் சொல்லவில்லை Fair Delimitation இன்று தான் ஆரம்பம் முதலில் கூறி வருகிறோம். எங்களோடு கூட்டணியில் இருந்தவர்கள் என்றாலும் தோற்றாலும் எல்லா காலகட்டங்களிலும் நாங்கள் அவர்களுடன் இருந்துள்ளோம்.

தமிழகத்திற்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்க உள்ளதால் மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளோம்” என்று கனிமொழி கூறினார்.

SCROLL FOR NEXT