தேசிய செய்திகள்

சபரிமலையில் முன்பதிவு செய்த பக்தர்கள் கோவிலுக்கு வருவது குறைந்தது ஏன்? கேரள மந்திரி பேட்டி

இணையவழியில் முன்பதிவு செய்தும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேர் வரை கோவிலுக்கு வருவதில்லை.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கான இணையவழி முன்பதிவை சிலர் மொத்தமாக செய்து, சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் விசாரணை நடத்தி வருவதாக கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் கே.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜை கடந்த நவம்பர் 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவிலில் தினமும் இலவச இணையவழி முன்பதிவு மூலம் 66 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) முறையில் 14 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.முரளீதரனிடம், சபரிமலையில் முன்பதிவு செய்த பக்தர்கள் கோவிலுக்கு வருவது குறைந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

இணையவழியில் முன்பதிவு செய்தும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேர் வரை கோவிலுக்கு வருவதில்லை. முன்பதிவு நடைமுறையில் உள்ள பிரச்சினைகளே இதற்கு காரணம். தரிசனத்துக்கான இடங்களை சிலர் மொத்தமாக இணையவழியில் முன்பதிவு செய்து, சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். சபரிமலை தரிசன முன்பதிவை சட்டவிரோதமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், உடனடி தரிசன முன்பதிவுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டியுள்ளது. முன்பதிவு நடைமுறையில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் கண்டறியப்பட்டு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT