பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா அருகே மேகதாது அணை கட்டும் முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில மக்களின் குடிநீர் மற்றும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் முன்மொழியப்பட்டதாக கர்நாடக அரசு கூறி வருகிறது. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 4.75 டி.எம்.சி. குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதுடன், இத்திட்டத்தின் மூலம் 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கர்நாடக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
அதே சமயம், மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தற்போது தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள த.வெ.க. அரசியின் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வருகிறது. அதே சமயம், கர்நாடக மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
இதனால் மேகதாது அணை விவகாரத்தில் என்ன முன்னேற்றம் ஏற்படக்கூடும்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் மாநில தலைவராக பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர் தலைமையில், சென்னையில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, மாநிலம் தழுவிய தீவிரப் போராட்டங்களை முன்னெடுக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாகவும், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானம் குறித்து டி.கே.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஏன்? என கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான ஆர்.அசோகா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“ஒரு காலத்தில் அரசியல் அதிகாரத்திற்காக மேகதாது பாதயாத்திரை நாடகத்தை அரங்கேற்றிய டி.கே. சிவகுமார், இப்போது ஏன் தமிழ்நாடு காங்கிரஸ் முன்பு அமைதியாக இருக்கிறார்? உங்கள் சொந்த கட்சியின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர், மேகதாது திட்டத்திற்காக ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கர்நாடகாவிற்கு வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.
உங்களுக்கு உண்மையிலேயே தைரியம், உறுதிப்பாடு மற்றும் கர்நாடக மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், இப்போதே சென்னைக்கு பேரணியாகச் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருங்கள். உங்கள் அரசியல் அர்ப்பணிப்பை நிரூபியுங்கள்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.