தேசிய செய்திகள்

ராமர் கோவில் நன்கொடை ஊழலுக்கு உடந்தையாக இருப்பது ஏன்? - பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

கோடிக்கணக்கான பக்தர்களிடம் திரட்டப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ராமர் கோவில் நன்கொடை ஊழலுக்கு உடந்தையாக இருப்பது ஏன்? என பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

“அயோத்தி ராமர் கோவில் காணிக்கை பணம் மட்டும் திருடு போகவில்லை. கோவில் கட்ட நாடு முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களிடம் திரட்டப்பட்ட பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி இரவு 7.10 மணிக்கு குசும் பதக் என்பவரி டம் இருந்து அன்சாரி, திவாரி ஆகியோர் ரூ.2 கோடிக்கு ஒரு நிலம் வாங்கினர். அடுத்த 5 நிமிடங்களில், அதே நிலத்தை சம்பத்ராய் மூலமாக ரூ.18 கோடியே 50 லட்சத்துக்கு ராமர் கோவில் அறக்கட்டளை வாங்கி உள்ளது.

வெறும் 5 நிமிடத்தில் 82.5 சதவீத விலை உயர்வை எப்படி அனுமதித்தனர்? இது அப்பட்டமான கொள்ளை. 5 ஆண்டுகளாகியும் விசாரணை அறிக்கை வெளியிடப்படவில்லை. பிரதமர் மோடியின் கண்எதிரில் இந்த கொள்ளை நடந்தும், அவர் மறைமுக ஒப்புதல் அளித்து, இந்த பாவத்துக்கு உடந்தையாக இருப்பது ஏன்?”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT