தேசிய செய்திகள்

கணவரை சிறைக்கு அனுப்ப முன்னாள் காதலனுடன் சேர்ந்து மனைவி தீட்டிய திட்டம்.. பார்சலில் வந்த விபரீத பொருள் - காஷ்மீரில் அதிர்ச்சி

கோழி பண்ணை உரிமையாளரின் மனைவி, திருமணத்திற்கு பிறகும் தனது முன்னாள் காதலனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சபாபோரா பகுதியில் இருக்கும் ஒரு கோழி பண்ணைக்கு பார்சல் மூலம் விலை உயர்ந்த போதைப்பொருள் டெலிவரி செய்யப்பட உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கோழி பண்ணைக்கு நேரில் சென்று பார்த்தபோது, சொன்னபடியே அங்கு ஒரு பார்சல் டெலிவரி ஆனது.

அந்த பார்சலை கோழி பண்னை உரிமையாளர் திறந்து பார்ப்பதற்குள் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அவரிடம் இருந்து பார்சலை பிடுங்கி அதை திறந்து பார்த்தனர். அதில் கொக்கைன், சராஸ் உள்ளிட்ட உயர்ரக போதைப்பொருட்களும், சில போதை மாத்திரைகளும் இருந்தன. இதையடுத்து போலீசார் அந்த கோழி பண்ணை உரிமையாளரை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

ஆனால் அந்த நபரோ தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார். அந்த நபர் மீது இதுவரை எந்த குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படாத நிலையில், இதில் ஏதேனும் சதி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த நபரின் செல்போன் அழைப்புகளை போலீசார் சோதனை செய்து பார்த்தபோது, சமீபத்தில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு நம்பரில் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது.

அது குறித்து போலீசார் கேட்டபோது, “எனது கோழி பண்ணைக்கு குறைந்த விலையில் தீவனம் டெலிவரி செய்வதாக கூறி ஒரு நபர் என்னிடம் பேசினார். அவர் கேட்டுக் கொண்டதால் எனது முகவரியை அவருக்கு அனுப்பி வைத்தேன்” என்று கூறினார். மேலும், இந்த விசாரணையின்போது மற்றொரு முக்கிய தகவலையும் போலீசாரிடம் அவர் கூறினார்.

அதாவது, சம்பந்தப்பட்ட கோழி பண்ணை உரிமையாளருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இதே போல் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு நம்பரில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ‘அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாதே, திருமணத்தை நிறுத்திவிடு’ என்று கூறியுள்ளார். இந்த தகவலை போலீசாரிடம் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, கோழி பண்ணை உரிமையாளரின் மனைவி பக்கம் போலீசாரின் சந்தேகம் திரும்பியது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முன்னதாக திருமணத்திற்கு முன்பு அந்த பெண், தாரிக் அகமது என்ற நபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் கோழி பண்ணை உரிமையாளரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தனது முன்னாள் காதலனுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கணவரை சிறைக்கு அனுப்பிவிட்டு காதலனுடன் சேர்ந்து வாழலாம் என அவர் திட்டமிட்டுள்ளார். காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலில் இருப்பதால், தனது கணவரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க அவரும், அவரது காதலன் தாரிக் அகமதும் முடிவு செய்துள்ளனர்.

இந்த திட்டத்தின்படி தாரிக் அகமது போதைப்பொருளை வாங்கி அதை தனது நண்பர் அரீப் என்பவரின் உதவியோடு கோழி பண்ணைக்கு டெலிவரி செய்துள்ளார். அரீப் தற்போது சவுதி அரேபியாவிற்கு தப்பி சென்றுவிட்டார். அவரது செல்போன் எண்ணில் இருந்துதான் கோழி பண்ணை உரிமையாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கோழி தீவனம் என்று சொல்லி போதைப்பொருளை டெலிவரி செய்து, அந்த தகவலை போலீசாருக்கு தெரியப்படுத்தி, கோழி பண்ணை உரிமையாளரை வசமாக சிக்க வைத்துள்ளனர்.

இது குறித்து விசாரணை அதிகாரி கூறுகையில், “இது மிகவும் சிக்கலான வழக்கு. கோழி பண்ணை உரிமையாளர் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என்ற முடிவுக்கே நாங்கள் வந்துவிட்டோம். அந்த அளவிற்கு தெளிவாக திட்டமிட்டு அவரை சிக்கவைத்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகளின் திறமையான விசாரணையால் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் கோழி பண்ணை உரிமையாளரின் மனைவி மற்றும் அவரது காதலன் தாரிக் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருளை டெலிவரி செய்த அரீப் என்பவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.