பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் அருகே தண்டேலிடவுனை சேர்ந்தவர் ராகவேந்திர வடகர் (வயது 37). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். ராகவேந்திர வடகர், 3 ஆண்டுகளாக மலேசியாவில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் அவர் சொந்த ஊருக்கு திரும்பினார். ஆனால் ராகவேந்திர வடகருடன் அவரது மனைவி வாழப்பிடிக்காமல் தகராறு செய்துவிட்டு 2 குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ராகவேந்திர வடகர், மனைவியை தன்னுடன் வந்து வாழும்படி சமாதானப்படுத்தி உள்ளார்.
ஆனால் சேர்ந்து வாழ மறுத்த மனைவி, தான் வேறு ஆண்களுடன் நெருக்கமாக புகைப்படங்களை தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவிட்டு வந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகவேந்திர வடகர் கேள்வி கேட்டால், உன்னுடன் வாழ முடியாது.
செத்துப்போ என கூறியதுடன், மனரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் தனக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. நீ என்னை விட்டு போய்விடு என அவரது மனைவி கூறி வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ராகவேந்திர வடகர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தனது கை நரம்பை அறுத்துக்கொண்டார். பின்னர் அதனை புகைப்படமாக எடுத்து தனது மனைவியின் வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்துள்ளார். இதை பார்த்த அவரது மனைவி, நீ செத்தாலும் கவலை இல்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து ராகவேந்திர வடகர் தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர், ராகவேந்திர வடகர் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த தண்டேலி போலீசார் விரைந்து சென்று, தற்கொலை செய்த ராகவேந்திர வடகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், போலீசார், தற்கொலை செய்வதற்கு முன்பு ராகவேந்திர எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், தனது மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வராததாலும், பல ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை அனுப்பி மனரீதியாக தொல்லை கொடுத்ததாலும் தற்கொலை செய்வதாக அவர் உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பல ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை அனுப்பி மனைவி மனரீதியாக தொல்லை கொடுத்ததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.