தேசிய செய்திகள்

கணவனை குத்திக் கொன்று குடலை உருவி பையில் போட்ட மனைவி - அதிர்ச்சி சம்பவம்

மாடியில் இருந்து குதித்த மனைவி சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார்.

குருஷேத்திரம்,

கணவனை, மனைவி கொடூரமாக குத்திகொன்று குடலை உருவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம், தம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40 வயது). இவரது மனைவி விமலா தேவி. இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ராஜேஷ் அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் உள்ள பெகோவா சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதற்காக இவர்கள் பெகோவா சாலையில் ரிங்கு என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

கணவன் கொலை

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ராஜேஷ் வசித்த வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக வீட்டு உரிமையாளர் ரிங்கு மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அருகில் அவரது மனைவி விமலா ஆக்ரோஷமாக கத்தியுடன் நின்றதோடு, கொலை செய்யப்பட்ட கணவரின் வயிற்றில் இருந்து சரிந்த குடல்களை ஒரு பையில் திணித்துக் கொண்டிருந்தார்.

போலீசார் விசாரணை

ரிங்குவைப் பார்த்ததும், அந்தப் பெண் பயத்தில் மாடியில் இருந்து குதித்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவலின் பேரில், குருஷேத்திர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாடியில் இருந்து குதித்து காயம் அடைந்த விமலா தேவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உறுப்புகள் மாயம்

ராஜேசின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. வயிறு 35 சென்டி மீட்டர் அளவுக்கு கிழிக்கப்பட்டிருந்தது. மேலும் பிரேத பரிசோதனையில் அவரது கல்லீரலின் கணிசமான பகுதியும், வலது சிறுநீரகமும் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இந்த காயங்கள் மற்றும் காணாமல் போன உறுப்புகள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நரபலியா?

பாரம்பரிய வைத்தியம் மற்றும் மாந்திரீக தொழிலில் விமலா தேவி ஈடுபட்டு வந்ததாகவும், ராஜேசை நரபலி கொடுத்து குடல் மற்றும் பாகங்களை எடுத்துள்ளதாக போலீசார் கருதுகிறார்கள். மேலும் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கொலைக்கான காரணம் என்ன என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காயம் அடைந்த விமலா தேவி சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நினைவு திரும்பியதும் அவரது வாக்குமூலத்தை பெற போலீசார் முயற்சித்து வருகின்றனர். மேலும் தடயவியல் சான்றுகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.