தேசிய செய்திகள்

மூளைச்சாவு அடைந்த ராணுவ வீரரின் மனைவி; இதயத்தை தானம் செய்ய முன்வந்த குடும்பம் - 14 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு

சண்டிகரில் இருந்து விமானம் மூலம் இதயத்தை டெல்லிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள சாந்திமந்திர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 41 வயதான அந்த பெண்ணுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 2-ந்தேதி(நேற்று), அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது கணவர், 2 மகள்கள் மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர். இதற்கிடையில், டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இதய நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவனுக்கு அவசரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயத்தை சிறுவனுக்கு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, சண்டிகரில் இருந்து விமானம் மூலம் இதயத்தை டெல்லிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, சண்டிகர் விமான நிலைய நிர்வாகம், அரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் குறுகிய கால இடைவெளிக்குள் இதயம் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு டாக்டர்கள் அந்த இதயத்தை சிறுவனுக்கு பொருத்தி, அறுவை சசிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதன் மூலம், 14 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. தற்போது அந்த சிறுவன் நலமுடன் இருப்பதாகவும், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT