தேசிய செய்திகள்

இன்ஸ்டாவில் பழகி கணவரை பழிவாங்கிய மனைவி..ஆசை வலையால் வீழ்ந்தார்..!

மனைவிதான் என்று தெரியாத பிரபுதத், அந்த பெண்ணின் அழகில் மயங்கி அவருடன் வலைதளத்தில் 'சாட்டிங்' செய்ய தொடங்கினார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே உள்ள ஜக்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சோனி திரிபாதி. இவருக்கும் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபுதத் திரிபாதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான சில காலத்திலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரபுதத் தனது மனைவியை துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்தியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சோனி,

கடந்த 4 ஆண்டுகளாகப் பெற்றோர் வீட்டிலேயே வேதனையுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில், தன்னைத் துரத்திய கணவரை பழி வாங்க ஒரு அதிரடி திட்டம் தீட்டினார். இதற்காக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு போலி கணக்கை உருவாக்கினார்.

அதில் அழகான பெண்ணின் புகைப்படத்தைப் பதிவிட்டு, தனது கணவருக்கு நட்பு அழைப்பு (பிரண்ட் ரிக்வஸ்ட்) அனுப்பினார். அது தன் மனைவிதான் என்று தெரியாத பிரபுதத், அந்த பெண்ணின் அழகில் மயங்கி அவருடன் வலைதளத்தில் 'சாட்டிங்' செய்ய தொடங்கினார். நாளுக்கு நாள் இவர்களது நெருக்கம் அதிகரித்தது. ஒருகட்டத்தில், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவும் பிரபுதத் சம்மதித்துள்ளார்.

தன்னை நேரில் வருமாறு சோனி அழைக்க, அது தனது மனைவி தான் என்பது தெரியாமல் பிரபுதத் ஆவலோடு கிளம்பினார். கடந்த 2-ந் தேதி தாராகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கோவி லுக்கு வரும்படி சோனி கூறியிருந்தார். அதன்படி பிரபுதத் தனது நண்பருடன் கோவிலுக்கு வந்தார். அங்கு சோனி தனது முகத்தை துணி மற்றும் கண்ணாடியால் முழுமையாக மறைத்து கொண்டு அமர்ந்திருந்தார். சற்று தொலைவில் அவரது தந்தை மற்றும் சகோதரர் மறைந்திருந்து கண்காணித்தனர்.

இந்தநிலையில் அங்கு வந்த பிரபுதத். அருகில் இருப்பது தனது மனைவி என்று தெரியாமல் ஆசையாக பேசினார். திடீரென சோனி தனது முகத்திரையை விலக்கினார். அப்போது மனை வியை கண்டு அவர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆத்திரமடைந்த பிரபுதத் சோனியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். உடனே மறைந்திருந்த சோனியின் உறவினர்கள் ஓடிவந்து அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் பிரபு தத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.