பெங்களூரு,
2 காட்டு யானைகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில், தெருநாய் குரைத்து இரு யானைகளையும் அங்கிருந்து விரட்டி விட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதை தடுக்க வனத்துறையினர் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் குடிநீர், உணவு தேடி காட்டு யானைகள் விளைநிலங்கள், தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று நாசப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பேலூர் தாலுகா ஐகபோரனஹள்ளி கிராமத்தில் யானைகள் 2 ஆக பிரிந்து கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதில் ஒரு யானை கூட்டத்தில் உள்ள மூத்த யானைக்கும், இன்னொரு கூட்டத்தில் உள்ள யானைக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு யானைகளும் ஆக்ரோஷமாக சண்டையிட்டன.
யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு தெருநாய்களும் சென்றன. தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு யானைகளை கடிக்க பாய்ந்தன. அப்படி இருந்தும் யானைகள் சண்டையிட்டபடியே தெருநாய்களை விரட்டியடித்தன. தெருநாய்கள் சத்தம், யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தான் யானைகள் இடையேயான மோதல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து, 2 யானைகளையும் விரட்டியடிக்க முயன்றனர். இருப்பினும் 2 யானைகளும் நீயா-நானா போட்டு பார்த்துவிடுவோம் என தந்தங்களால் முட்டி ஆக்ரோஷம் குறையாமல் தொடர்ந்து மாறிமாறி தாக்கிக் கொண்டே இருந்தது.
எனவே அப்பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களை வனத்துறையினர் அங்கிருந்து விரட்டினர். மேலும் யானைகளை விரட்டியடிக்க தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒரு நாய், யானைகள் இடையே புகுந்து குரைத்தபடி இருந்தது. இதையடுத்து 2 யானைகளும் சண்டையை கைவிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தனித்தனி திசையில் சென்றுவிட்டது.
இதற்கிடையே யானைகள் மோதிக்கொண்டதை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருயானைகள் சண்டையிட்டதை நாய் வந்து விலக்கிவிட்ட ருசிகர சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பேசு பொருளானது.