புதுடெல்லி,
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில், 'மத்திய அரசின் நிர்வாக கொள்கைகளை மாநில அரசு மீது திணிக்க முடியாது' என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான நிலத்தை அடையாளம் காணும்படி, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. மேலும், 'நவோதயா பள்ளிகள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டையும் தெரிவிக்க வேண்டும்' என, அறிவுறுத்தி இருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கல்வி என்பது அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் வருவதால், கொள்கைகளை வகுப்பதற்கும், சட்டங்களை இயற்றுவதற்கும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. தமிழக அரசு கடந்த 2006-ல் இயற்றிய, 'தமிழ் கற்றல் சட்டத்தின்' கீழ் மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநில அரசின் சொந்தச் சட்டங்களுக்கு முரணாக இருக்கும் மத்திய அரசின் நிர்வாகக் கொள்கைகளை செயல்படுத்த முடியாது. நவோதயா பள்ளிகளை அமைக்கும்படி கட்டாயப்படுத்தவோ, தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும்படி வற்புறுத்தவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.
நிலக் கொள்கை, நில மேலாண்மை மற்றும் உரிமை மாற்றம் தொடர்பான விவகாரங்கள் முற்றிலும் மாநில அரசின் விருப்ப உரிமைக்கு உட்பட்டவை. எனவே, ஒரு மாநில அரசிடம் இருந்து நிலத்தைப் பெறவோ அல்லது நிலத்தை ஒதுக்கீடு செய்ய கட்டாயப்படுத்தியோ கோர்ட்டு உத்தரவிட முடியாது. இதனால், மாவட்டம்தோறும் நவோதயா பள்ளிகளுக்கு நிலத்தை அடையாளம் காணும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசு, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 5,109.90 கோடி ரூபாய் நிதியை இன்னும் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த நிதி விடுவிக்கப்பட்டால், மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தி, மாணவர்கள் கூடுதல் பயனடைய வழிவகை செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.