கொல்கத்தா,
இந்தியாவின் கிழக்கில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்காளம் இருக்கிறது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடந்த 2011 முதல் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வந்தார்.
அதேநேரம் மாநிலத்தில் புதிய சக்தியாக பா.ஜனதா உருவெடுத்து வந்தது. 2016-ம் ஆண்டு தேர்தலில் 3 இடங்களை பெற்று மாநில சட்டசபையில் கணக்கை தொடங்கிய அந்த கட்சி. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் 77 தொகுதிகளை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியானது.
மாநில அரசியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த அந்த கட்சி ஆட்சியை பிடிக்க கடந்த 5 ஆண்டுகளாக கடுமையாக போராடியது.
இந்த பரபரப்பான சூழலில் மாநிலத்தில் கடந்த மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் வன்முறை, முறைகேடு போன்ற விதிமீறலில் சிக்கிய பால்டா தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு, வருகிற 21-ந்தேதி மறுதேர்தல் நடைபெறும் என தேர்தல் கமி ஷன் அறிவித்தது.
முன்னதாக இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் என 4 முனைப்போட்டி நிலவியது. எனினும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையேயான களமாகவே இருந்தது.
கொதிக்கும் கோடையை விட அதிகமாக அனலடித்த மேற்கு வங்காள தேர்தல் களத்தில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
இந்த பரபரப்பான சூழலில் பால்டா தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 293 இடங்களில் பதி வான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் கருத்துக்கணிப்புகள் கட்டியம் கூறியபடியே தொடக்கம் முதலே பா.ஜனதா முன்னிலை பெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி பா.ஜனதா வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுக்கொண்டே இருந்தனர்.
' கிராமம், நகர்ப்புறம், எல்லைப்பகுதி என மாநிலம் பரவலாக பா.ஜனதா வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மாநிலத்தில் ஆட்சியமைக்க 148 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜனதா இரவு 10 மணி நிலவரப்படி, 207 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.
கடந்த தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த அந்த கட்சி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை இந்த முறை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் கடந்த தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த திரி ணாமுல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ், ஆம் ஜனதா உன்னாயன் கட்சிகள் தலா 2 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு, மதசார்பற்ற முன்னணி ஆகியவை தலா ஓரிடமும் பெற்றன.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி (58,812 வாக்குகள்). தான் போட்டியிட்ட பவானிப்பூர் தொகுதியில் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரியிடம் (73,917) தோல்வி அடைந்தார்.
மேலும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஏராளமான மந்திரிகள் தோல்வியை சந்தித்து இருந்தனர்.
பவானிப்பூரில் மம்தாவை தோற்கடித்த சுவேந்து அதிகாரி, தான் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமிலும் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்தார். மாநிலத்தில் பா.ஜனதாவின் முதல்-மந்திரியாக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி இந்த தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதவி விலக மாட்டேன் என்று அடம்பிடித்து வருகிறார். இது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நான் தோல்வி அடையவில்லை. எனவே நான் ராஜ்பவனுக்கு செல்லப்போவது இல்லை. நான் எனது ராஜினாமா கடிதத்தை சமர்பிக்க மாட்டேன். தேர்தல் ஆணைய உதவியோடு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் நான் தாக்கப்பட்டேன். நீதிமன்றம் கூட எங்களுக்கு நீதி வழங்க தவறிவிட்டது. என் வாழ்நாளில் இவ்வளவு மோசமான தேர்தலை பார்த்ததே இல்லை.வாக்காளர் பட்டியலில் இருந்து 90 லட்சம் பேரை நீக்கினர். நீதிமன்றம் சென்ற பிறகு 32 லட்சம் பேரை சேர்க்கப்பட்டனர்.
சோனியா காந்தி, ராகுல், ஹேமந்த் சோரன், அரவிந்த் கேஜரிவால், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் என்னைத் தொடர்புகொண்டு பேசினர். இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் என்னுடன் துணை நிற்பதாகக் கூறியுள்ளனர். எங்களுடைய ஒற்றுமை அடுத்தடுத்த நாள்களில் மேலும் வலுவடையும் என நினைக்கிறேன். அகிலேஷ் யாதவ் இன்று இங்கு வருவதாகக் கூறினார். ஆனால், நான்தான் மறுத்துவிட்டேன். நாளை வருவதாகக் கூறியுள்ளார். மேற்கு வங்கத்திற்கு அகிலேஷ் நாளை வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.