தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய மந்திரி பதில்

ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மேற்காசியாவில் போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது அதிக விலைக்கு வாங்கப்பட்ட கச்சா எண்ணெய்தான் தற்போது சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் பொதுவாக இரண்டு மாதங்களுக்கு முன்பே கச்சா எண்ணெயை கொள்முதல் செய்கின்றன.

சர்வதேச சந்தை

எனவே, தற்போது பயன்பாட்டில் இருப்பது இரண்டு மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட சரக்குகளே. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்னும் 2 முதல் 3 மாதங்கள் வரை தற்போதைய அளவிலேயே நீடித்தால், அதன்பிறகு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். தற்போது அதுகுறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்றார்.மேற்காசியாவில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 120 அமெரிக்க டாலர் வரை உயர்ந்தது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, தற்போது அது சுமார் 70 டாலராக குறைந்துள்ளது. எனினும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்னும் ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கச்சா எண்ணெயை சுத்திகரித்து வருவதால், சர்வதேச விலை சரிவின் முழு பலனும் இதுவரை கிடைக்கவில்லை.

எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு

மேலும், கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவை (எல்பிஜி) கொள்முதல் விலைக்கு கீழ் விற்பனை செய்ததன் காரணமாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.74,781 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் பதற்றம் உச்சத்தில் இருந்த காலத்தில், நுகர்வோர் மீது முழு விலைச் சுமை விழாமல் இருக்க, தினமும் சுமார் ரூ.2,400 கோடி வரை இழப்பை அந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன. மேற்காசிய போர் காலத்தில் இந்தியாவில் பெட்ரோல் விலை மொத்தமாக லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டது. இருப்பினும், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விலை உயர்வு குறைவாகவே இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் பெட்ரோல் விலை 5.58 சதவீதம் மட்டுமே உயர்ந்த நிலையில், வளர்ந்த நாடுகளில் சுமார் 20 சதவீதமும், அண்டை நாடுகளில் கிட்டத்தட்ட 35 சதவீதமும் உயர்ந்தது” என்றார்.