தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறுமா...?

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறுவதற்கு 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அதில் தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சாசன திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவு கிடைக்காததால் கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதா தோல்வி அடைந்திருந்தது.

தற்போது மீண்டும் அந்த மசோதா கொண்டு வரப்படும் நிலையில், இந்த முறையும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை பா.ஜனதா எட்டுவதில் சந்தேகமே நிலவுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதாவுக்கு ஆதரவாக பா.ஜனதா கூட்டணியின் 298 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், தற்போது கூடுதலாக 21 உறுப்பினர்களை பா.ஜனதா கூட்டணி பெற்றிருக்கிறது.

அந்தவகையில் திரிணாமுல் காங்கிரசின் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர், சிரோமணி அகாலிதளத்தின் ஒரு எம்.பி. என தற்போது பா.ஜனதா கூட்டணியின் பலம் 319 ஆகியிருக்கிறது. அதேநேரம் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் தி.மு.க. (22 எம்.பி.க்கள்) மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (8), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (4) ஆதரவு இந்த முறை ஆளும் கூட்டணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் பா.ஜனதா கூட்டணியின் பலம் 353 ஆகும் என தெரிகிறது. ஆனாலும் பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு தேவையான பலம் கிடைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது. மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 3 இடங்கள் காலியாக உள்ளன. சபாநாயகரை தவிர்த்து மொத்தமுள்ள 539 பேரும் மசோதா மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்டால், மசோதா வெற்றிபெற 360 வாக்குகள் தேவை.

ஆனால் தி.மு.க., சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் மசோதாவை ஆதரித்தால் கூட, 353 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதால் மேலும் 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இதன் மூலம் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதாகவே தெரிகிறது.

SCROLL FOR NEXT