மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மத்திய அரசு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் நிமித்தம் தயாரிக்கப்பட்ட 3 மசோதாக்கள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் சிறப்பு கூட்ட அமர்வில் தாக்கல் செய்யப்படுகின்றன.
இந்த சட்டத்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரி வித்து உள்ளன. குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநி லங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருக்கின்றன. ஆனால் இந்த மசோதாக்களால் எந்த மாநிலத்துக்கும் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என உள்துறை மந்திரிஅமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். எனினும், தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களுக்கு மிகப்பெரும் அநீதியாக இருக்கும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? என்று விவரங்கள் வருமாறு
*மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் இருந்தாலும், தொகுதி மறுவரையறை, அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்றும் போது இந்திய அரசியலமைப்பின் 369வது பிரிவின் கீழ் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 சதவீத ஆதரவு அல்லது குறிப்பிட்ட அவையில் உள்ள 3ல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்
*மக்களவையில் அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற 364 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதேநேரம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால், 71 எம்.பிக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு 234 உறுப்பினர்கள் உள்ளனர்.அதேபோல் மாநிலங்களவையில் மொத்தம் 164 ஆதரவு வாக்குகள் தேவைப்படும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வசம் 141 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் அங்கும் 23 ஆதரவு வாக்குகளை திரட்ட வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.
அதேநேரம், மசோதா தாக்கல் செய்யும் போது எதிர்க்கட்சிகள் திடீரென வெளிநடப்பு செய்தாலோ, அல்லது ஆதரவாக வாக்களித்தாலோ நிலைமை பாஜக வசம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள எண்ணிக்கையை வைத்து பார்த்தால் அரசுக்கே ஆதரவு கிடைக்க வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது. எனினும், கூட்டத்தொடரில் தான் இதற்கு முழுமையான விடை கிடைக்கும்.