மங்களூரு,
உடுப்பியில் மாற்றுத்திறனாளி மகளை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்துெகாண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டா போலீஸ் எல்லைக்குட்பட்ட கேதூர் அருகே ஷானடி கோரகா பகுதியை சேர்ந்தவர் சுதாகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி நேத்ரா வதி (வயது 40). இந்த தம்பதியின் மகள் சுப்ரதி (14). மாற்றுத்திறனாளியான இந்த சிறுமி பிறவியிலேயே வாய், பேச முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வந்தாள். நேத்ராவதி தனது மகளை பார்த்து வந்தார்.
மகளின் ஊனத்தால் சுதாகரும். நேத்ராவதியும் மனக்கவலையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் சுதாகர் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் நேத்ராவதியும், சுப்ரதியும் வீட்டில் தனியாக இருந்தனர்.
மகளின் ஊனத்தால் மனமுடைந்து காணப்பட்ட நேத்ராவதி, சுப்ரதியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை 8.30 மணி அளவில் தனது மனதை கல்லாக்கிக் கொண்டு அரிவாளால் மகள் சுப்ரதியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் தானும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மதியம் நேத்ராவதியின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சென்ற போது தான் இந்த கொடூர சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உடுப்பி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் எஸ்.நாயக், குந்தாப்புரா துணை போலீஸ் சூப்பிரண்டு எச்.டி.குல்கர்னி மற்றும் கோட்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார், நேத்ராவதி மற்றும் சுப்ரதியின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சுப்ரதி ஊனமாக இருந்ததால் மனமுடைந்து நேத்ராவதி இந்த முடிவை எடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.