டாக்டர் சிவரஞ்சனி 
தேசிய செய்திகள்

குழந்தைகளின் உயிரை காக்கும் ரூ.9 கோடி மதிப்புள்ள மருந்தை ரூ.2.5 லட்சமாக குறைத்து பெண் டாக்டர் சாதனை

நோயால் பாதிக்கப்பட்ட 7 குழந்தைகளுக்கு ஓராண்டுக்கான மருந்தை முற்றிலும் இலவசமாக டாக்டர் சிவரஞ்சனி வழங்க உள்ளார்.

ஐதராபாத்,

அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிரைக் காக்க, ரூ.9 கோடி மதிப்புள்ள மருந்தை வெறும் ரூ.2.5 லட்சமாக குறைத்து ஐதராபாத் பெண் டாக்டர் சாதனை படைத்துள்ளார்.

மரபணு நோய் பாதிப்பு

ஆலன்-ஹெர்ன்டன்-டட்லி சிண்ட்ரோம் (AHDS) எனப்படும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். இதற்கு 'டிராட்ரிகால்' என்ற மருந்து அவசியமாகும். ஆனால், வெளிநாடுகளில் இந்த மருந்தின் ஓராண்டு செலவு சுமார் ரூ.9 கோடி வரை இருப்பதால், சாமானிய பெற்றோர்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

பெண் டாக்டர் முயற்சி

இந்த நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த பிரபல குழந்தைகள் நல டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ முன்வந்தார். அவர் இந்திய மற்றும் நெதர்லாந்து மருத்துவ அமைப்புகளுடன் கைகோர்த்து, 'பார்மசூட்டிகல் காம்பவுண்டிங்' என்ற பிரத்யேக முறையில் நெதர்லாந்தில் இந்த மருந்தை நேரடியாகத் தயாரிக்க ஏற்பாடு செய்தார். இதன் மூலம், ரூ.9 கோடி மதிப்புள்ள மருந்தின் விலை வெறும்ரூ.2.5 லட்சமாக குறைந்துள்ளது.

7 குழந்தைகளுக்கு இலவசம்

மேலும், நன்கொடையாளர்கள் மூலம் நிதி திரட்டிய டாக்டர் சிவரஞ்சனி, இந்த நோயால் பாதிக்கப்பட்ட 7 குழந்தைகளுக்கு ஓராண்டுக்கான மருந்தை முற்றிலும் இலவசமாக வழங்க உள்ளார். வருகிற 30-ந் தேதி ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள பெற்றோர்களிடம் இந்த மருந்துகள் வழங்கப்பட உள்ளன. பெண் டாக்டரின் இந்த மனிதநேய செயலுக்கு பெற்றோர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT