பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு ஒருவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னை ராமநகர் அருகே தொட்டமன்னுகுட்டே கிராமத்தை சேர்ந்த கிரண் என கூறி அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்து கொண்டார். அத்துடன் தான் ஒரு ஜோதிடர் என்றும் கிரண் தெரிவித்தார்.
பின்னர் தான் பெங்களூருவில் ஒரு சிறப்பு பூஜை செய்ய இருப்பதாகவும், அந்த பூஜைக்கு ஒரு பெண்ணின் நிர்வாண புகைப்படம் தேவைப்படுவதாகவும், அந்த பெண்ணின் உடலில் எங்கும் மச்சம் இருக்க கூடாது என்றும், மச்சம் இருந்தால் பூஜை வெற்றி அடையாது என்றும், அதனால் மச்சம் இல்லாத பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறினார். இந்த பூஜைக்காக உங்களை தேர்வு செய்ய உள்ளேன் எனவும் கிரண் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அந்த பெண் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். அதன்பிறகும், அந்த பெண்ணிடம் நிர்வாண புகைப்படத்தை அனுப்பும்படி கிரண் செல்போனில் தகவல்களை அனுப்பி வைத்தபடி இருந்தார். இவ்வாறு நிர்வாண புகைப்படத்தை அனுப்பினால், ரூ.30 லட்சம் கொடுப்பதாகவும் அப் பெண்ணுக்கு கிரண் தகவல்களை அனுப்பினார். கடந்த ஒரு வாரமாக நிர்வாண புகைப்படத்தை கேட்டு கிரண் தொல்லை கொடுத்ததால், அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளானார்.
மேலும் நடந்த சம்பவங்கள் பற்றி ராமநகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட கிரணை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். நிர்வாண புகைப்படத்துக்கு ரூ.30 லட்சம் தருவதாக ஆசைகாட்டி பெண்ணுக்கு தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் ராமநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.