பாத்திமா,காட்டுப்பன்றி 
தேசிய செய்திகள்

கேரளாவில் காட்டுப்பன்றி தாக்கி பெண் பலி - 3 பேர் படுகாயம்

பாத்திமாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கேரள மந்திரி பி.கே. பஷீர், அரசு தரப்பில் ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் அதிகாலை தொழுகைக்கு சென்ற கிராம மக்கள் மீது காட்டுப்பன்றிக் கூட்டம் வெறித்தனமாக பாய்ந்து தாக்கியதில், 60 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுப்பன்றி கூட்டம்

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் இடவன்னா அருகே உள்ள கிழக்கு சாத்தலூரைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 60). இன்று அதிகாலை 5 மணி அளவில், பாத்திமா உள்ளிட்ட அதே பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் அங்குள்ள மசூதிக்கு அதிகாலை தொழுகைக்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் இருட்டில் வீதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் பதுங்கியிருந்த ஒரு பெரிய காட்டுப்பன்றி திடீரென அவர்கள் முன்னால் வந்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட முயன்றனர்.

மூதாட்டி பலி

ஆனால், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் காட்டுப்பன்றி, முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த பாத்திமா மற்றும் முகமது அலி ஆகிய இருவர் மீதும் பாய்ந்து கடித்து குதறின. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயன்றபோது, காட்டுப்பன்றிகள் அவர்கள் மீதும் பாய்ந்து தாக்குதல் நடத்தின.

இந்த கோர தாக்குதலில் பாத்திமா, முகமது அலி, ஹமீத் மற்றும் வி.பி. அப்துல்லா ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காட்டுப்பன்றியை விரட்டியடித்து விட்டு, படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார்.

ரூ.14 லட்சம் நிவாரணம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, உயிரிழந்த பாத்திமாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கேரள மந்திரி பி.கே. பஷீர், அரசு தரப்பில் ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதிகாலை தொழுகைக்குச் சென்ற பெண் காட்டுப்பன்றி தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT